அசோலா சங்கம், கால்நடை சங்கம்… களப்பயிற்சியில் கலக்கும் கல்லூரி மாணவர்கள்!
நவீன் இளங்கோவன். | தே. தீட்ஷித்
Original Article link : https://www.vikatan.com/news/agriculture/agricultural-students-doing-farm-activities-in-college-campus
கல்லூரியில்
கல்லூரி
திருச்சி மாவட்டம், முசிறி வெள்ளாளப்பட்டியில் உள்ள எம்.ஐ.டி வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, 110 ஏக்கரில் பரந்து விரிந்து செழிப்பான பண்ணையாக காட்சி அளிக்கின்றது. இது மாணவர்களின் நேரடி அனுபவ பாடப்புத்தகமாகத் திகழ்கிறது. ஆங்காங்கே தலைதூக்கி வீசும் பயிர்களின் பசுமை; காடுகளைப் போல அடர்ந்து வளரும் ஆயிரக்கணக்கான மரங்கள், கால்நடைகளின் விதவிதமான சப்தங்கள்… இவற்றுக்கு இடையே மாணவர்கள் தங்குவதற்கான தனித்தனி குடில்கள்… எனக் கவனம் ஈர்க்கிறது.
மாணவர்கள் பாடப் புத்தகத்தில் படிப்பதைத் தாண்டி, செயல்முறையாகக் கற்றுக்கொண்டால்தான் அது முழுமையான பலன் அளிக்கும். குறிப்பாக, வேளாண் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் நிலத்தில் இறங்கி நேரடி அனுபவம் பெற்றால்தான் விவசாயத்தைத் திறம்படக் கற்க முடியும். இதனால் இங்கு பயிலும் மாணவர்களைத் தனித்தனி குழுக்களாகப் பிரித்து நாள்தோறும் விவசாயத்தில் இறக்கிவிட்டு அசத்தி வருகிறது இக்கல்லூரி.
ஓர் காலைப்பொழுதில் இக்கல்லூரிக்கு நாம் சென்றபோது… சீருடை அணிந்த ஏரளமான மாணவர்கள், மிகுந்த உற்சாகத்தோடு விவசாயப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த காட்சி, நம்மைப் பெரிதும் வசீகரித்தது.
நாற்று உற்பத்தி சங்கம், அசோலா சங்கம், மண்புழு சங்கம், காளான் வளர்ப்புச் சங்கம், காய்கறிச் சாகுபடி சங்கம், கால்நடை வளர்ப்புச் சங்கம் என என ஒவ்வொன்றிற்கும் தனித் தனி சங்கம் அமைத்து இம்மாணவர்கள் நாள்தோறும் களப்பயிற்சி பெறுகிறார்கள்.
ஒவ்வொரு சங்கத்திலும் 7-15 மாணவர்கள்
நம்மிடம் பேசிய இக்கல்லூரியின் முதல்வர் கண்ணன், “மாணவர்கள் எப்படிப் படிக்கிறார்கள், ஒவ்வொரு தேர்விலும் எப்படி மதிப்பெண் எடுக்கிறார்கள் எனக் கவனிப்பது மட்டுமே எங்கள் நோக்கமல்ல. இவர்களை நன்கு தேர்ந்த விவசாயிகளாக இப்போதே உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய முக்கிய இலக்கு. வேளாண்மை சார்ந்து மாணவர்களிடம் இருக்கும் தனித்திறமைகளையும் விருப்பங்களையும் வெளிக்கொணர வேண்டும் என்பதற்காக, தனித்தனி சங்கங்கள் அமைத்து செயல்பட வைத்துள்ளோம். அந்தவகையில், பட்டு வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, நாற்று உற்பத்தி, பசுமைக்குடில், மண்புழு உரம் தயாரித்தல், அசோலா உற்பத்தி, காளான் வளர்ப்பு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே சங்கங்களை அமைத்துள்ளோம். ஒவ்வொரு சங்கத்திலும் 7 முதல் 15 மாணவர்கள் வரை இருப்பார்கள். தினமும் காலை கல்லூரி ஆரம்பிப்பதற்கு முன்பும், மாலை வகுப்புகள் முடிந்தபிறகும் மற்றும் விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாணவர்கள் இந்தச் சங்கங்களின் அங்கத்தினர்களாகச் செயல்பட்டு, விவசாயப் பணிகளில் ஈடுபட்டு நேரடி களப்பயிற்சி பெறுகிறார்கள்.
விவசாயத் தொழில்நுட்பங்கள் குறித்து ஆத்மார்த்தமான தெளிவுகளை மாணவர்கள் பெற வேண்டும் என்பதுதான் இந்தச் சங்கங்களுடைய நோக்கம். இதன்மூலம் எங்கள் மாணவர்களின் தனித்திறமையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது.
இக்கல்லூரி வளாகத்தில் உள்ள பண்ணையில்தான் அனைத்து சங்கங்களுக்குமான குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. எங்களுடைய கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் பெரும்பகுதியினர் இங்கயே தங்கி படிப்பவர்கள் என்பதால், வகுப்பறை நேரம் போக, மீதி நேரங்களில் முழுமையாக, விவசாயப் பணிகளில் ஈடுபட முடிகிறது எனத் தெரிவித்தார். இப்பண்ணைக்குள் நாம் வலம் வந்தபோது… நாற்று உற்பத்தி, பசுமைக் குடில், கால்நடை வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, அசோலா உற்பத்தி, மண்புழு உரம் தயாரிப்பு என ஆங்காங்கே களைகட்டியிருந்தன.
இக்கல்லூரியின் தோட்டக்கலைத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ரவிச்சந்திரன், ‘‘காய்கறிப் பயிர்கள், மரங்கள், அலங்கராச் செடிகள் போன்றவற்றுக்குத் தேவையான நாற்றுகள் மற்றும் கன்றுகளை மாணவர்களே உற்பத்தி செய்கிறார்கள். இந்த நாற்றுப் பண்ணையில் மிளகாய், தக்காளி, கத்திரி உள்ளிட்ட காய்கறிச் செடிகளின் நாற்றுகளும், பாக்கு, தென்னை உள்ளிட்ட மரக் கன்றுகளும் வளர்க்கப்படுகின்றன. பாலித்தீன் பைகள் மற்றும் தொட்டிகளில் 25 வகையான அலங்காரச் செடிகளும் உற்பத்திச் செய்யப்படுகின்றன.
இதன் மூலம் தரமான விதைத் தேர்வு, விதை நேர்த்தி, நாற்று மற்றும் கன்றுகளின் வளர்ச்சிக்கு தேவையான இடுபொருள் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து பராமரிப்புகளையும் துல்லியமாக அறிந்து கொள்கிறார்கள். அலங்காரச் செடிகளைப் பொறுத்தவரை வேர்க்குச்சிகள், கிழங்கு மற்றும் பதியம் மூலமாக உற்பத்தி செய்கிறார்கள்’’ எனத் தெரிவித்தார்.
இப்பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள பசுமைக் குடிலுக்கு நம்மை மிகுந்த ஆர்வத்தோடு அழைத்துச் சென்றார்கள், பசுமைக் குடில் சங்க மாணவர்கள். இங்கு ஒரு பகுதியில் ஸ்ரேயா வகைத் தக்காளிச் செடிகள்… இன்னொரு பகுதியில் மொரிங்கா பீன்ஸ்.. மற்றொரு பகுதியில் கேரட், பீட்ருட்…. அதற்கு அடுத்ததாக ஸ்ட்ராபெர்ரி, செர்ரி தக்காளி மற்றும் ஊறுகாய்க்குப் பயன்படும் சிறிய ரக வெள்ளரியும் பயிரிட்டுள்ளார்கள் இம்மாணவர்கள். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளை, இக்கல்லூரி உணவு விடுதியில் விற்பனை செய்துவிடுகிறார்கள். அலங்காரச் செடிகளை வெளியே விற்பனை செய்கிறார்கள். இதன்மூலமாகக் கிடைக்கும் பணத்தை, இப்பயிர்களின் மறு உற்பத்தி மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
சவால்களை எதிர்கொள்ள முடியும்
‘‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதுனு’ சொல்வாங்க. நாங்க புத்தகங்கள்ல படிக்குறதை உடனடியா செயல்படுத்திப் பார்க்குறதுனாலதான் இதுல உள்ள சவால்களை அனுபவப்பூர்வமா தெரிஞ்சிக்க முடியுது. அதுமட்டுமல்லாம, அதுக்கேத்த மாதிரி தீர்வு காணவும் முடியுது’’ என்கிறார்கள் மாணவர்கள்.
தேனீ மற்றும் பட்டுப்புழு வளர்ப்புச் சங்கங்களுக்கு வழிகாட்டுநராகச் செயல்படும் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் தேவி, “பட்டுப்புழு வளர்ப்பின் மூலம் பட்டுக்கூடு உற்பத்தி செய்வது மிகவும் கடினம் என நினைத்து விவசாயிகள் பலரும் இதைச் செய்யத் தயங்குகின்றனர். ஆனால், உண்மையில் குறைந்த நாட்களில் ஒரு சிறந்த லாபத்தை இந்தப் பட்டுப்புழு வளர்ப்பு கொடுக்கும். அதனை எங்களுடைய மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் வகையில், 50 முட்டைத் தொகுப்புகளை மாணவர்களுக்கு வாங்கிக் கொடுத்து வளர்க்க வைத்தோம். பட்டுப்புழுக்களின் உணவான மல்பெரியை (எம்.ஆர்-2, வி-1) ஒரு ஏக்கரில் எங்கள் மாணவர்களே சாகுபடி செய்கிறார்கள். மல்பெரி இலைகளை எவ்வாறு பட்டுப்புழுக்களுக்குக் கொடுக்க வேண்டும், முட்டைத் தொகுப்பினை எப்படிப் பத்திரமாகப் பராமரிக்க வேண்டும், பட்டுக்கூடுகளை எவ்வாறு பாதுகாப்பாகக் கையாள வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும் மாணவர்கள் அனுபவப்பூர்வமாகக் கற்றுக்கொள்கிறார்கள். 8 தேன் பெட்டிகளை வைத்து, தேன் உற்பத்தியையும் எங்கள் மாணவர்கள் செய்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
உயிர் உரங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை
காளான் வளர்ப்பு மற்றும் உயிர் உரங்கள் சங்கங்களுக்கு வழிகாட்டுநராகச் செயல்படும் தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மணிகண்டன், “20 அடி அகலம், 30 அடி நீளம் மற்றும் 13 அடி உயரத்தில் குடில் அமைத்துச் சிப்பிக் காளானை மாணவர்கள் வளர்த்து வருகின்றனர். பால் காளான் மற்றும் மொட்டுக் காளான் வளர்க்கலாம் எனவும் திட்டமிட்டுள்ளனர். அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உள்ளிட்ட உயிர் உரங்களை உற்பத்தி செய்து, ஒரு கிலோ 150 ரூபாய் என வெளியில் விற்பனை செய்து வருகிறார்கள். எப்படி நுண்ணுயிர் உரங்களை மண்ணிலிருந்து பிரித்தெடுத்து வளர்ப்பது போன்றவற்றைக் கற்றுக்கொள்கிறார்கள். அதேபோலப் பயிர்களில் நோய்களைக் கட்டுப்படுத்த நுண்ணியிர் எதிர்க்கொல்லிகளான சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி போன்றவற்றையும் மாணவர்கள் உற்பத்தி செய்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
ஆடு, மாடு, கோழி, முயல், காடை
கால்நடை வளர்ப்புச் சங்கத்தைக் கவனித்துவரும் உதவிப் பேராசிரியர் முனைவர் கார்த்திக்ராஜா, “நாட்டு மாடுகள், ஜெர்சி கலப்பின மாடுகள் உள்பட 41 மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இதில் 14 மாடுகள் பால் கறக்கின்றன. இதன்மூலம் தினமும் 150 லிட்டர் பால் கிடைக்கிறது. இது அனைத்தையும் கல்லூரியில் உள்ள உணவு விடுதிக்கு கொடுத்து விடுகிறோம். மேச்சேரி, தலைச்சேரி, சிரோகி, சேலம் சிவப்பு, போயர் என 171 ஆடுகளும் வளர்த்து வருகிறோம். 62 முயல்கள் இருக்கின்றன. ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் விரைவில் மீன் வளர்க்க இருக்கிறோம். பன்றி வளர்ப்பிலும் ஈடுபடவுள்ளோம். கால்நடை வளர்ப்புச் சங்கத்தில் இருக்கும் மாணவர்கள் கால்நடைகளுக்குத் தீவனம் கொடுப்பதில் இருந்து, சாணத்தை உரமாக மாற்றுவது வரை அனைத்தையும் ஈடுபாட்டோடு செய்கின்றனர். மேலும், கால்நடை வளர்ப்பு, கால்நடை பராமரிப்பு, கால்நடை நோய்த் தடுப்பு போன்றவற்றை அனுபவப்பூர்வமாகக் கற்றுக்கொள்கின்றனர்’’ எனத் தெரிவித்தார்.
மா, கொய்யா, மாதுளை
இக்கல்லூரியில் செயல்படும் அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்பாளரும், வேளாண் விரிவாக்கத்துறை இணைப் பேராசிரியருமான ஜெயக்குமார், “வகுப்பறைகளுக்கு நிகரான முக்கியத்துவத்தைச் செயல்முறை பயிற்சிக்கும் கொடுக்கிறோம். மாணவர்களுக்கு இயல்பான ஆர்வமும் அனுபவமும் வர வேண்டும் என்பதற்காகதான் இச்சங்கங்களை உருவாக்கியிருக்கிறோம். ஆனால், அதேசமயம் இதில் கட்டாயம் பங்கு பெற வேண்டும் என எந்தவொரு மாணவரையும் நாங்கள் நிர்பந்திப்பதில்லை. இவர்களே தாமாக முன் வந்து துடிப்போடு செயல்படுகிறார்கள். எங்கள் பண்ணையில் மேற்கொள்ளப்படும் விவசாய உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பில், எங்களுடைய மாணவர்களுக்கு உறுதுணையாக விவசாயத் தொழிலாளர்கள் 50 பேர் பணியாற்றுகிறார்கள்’’ எனத் தெரிவித்தார்.
இப்பண்ணையில் அடர்நடவு முறையில் 2 ஏக்கரில் 1,600 கொய்யா மரங்கள், 3 ஏக்கரில் நாட்டு மாதுளை, 3 ஏக்கரில் இஸ்ரேல் மாதுளை, 10 ஏக்கரில் மாமரங்கள், 3 ஏக்கரில் ஆரஞ்சு உள்பட இன்னும் பலவிதமான மரங்கள் இருக்கின்றன.
வேளாண் பட்ஜெட் விவாதம்!
‘‘ஒரு குறிப்பிட்ட சங்கத்தில் பங்குபெறும் மாணவர், தனக்கு விருப்பம் இருந்தால் மற்ற சங்கங்களிலும் பங்களிப்புச் செய்யலாம். இதன்மூலம் எதிர்காலத்தில் நர்சரிப் பண்ணைகள், காய்கறிகளை விளைவிக்கும் பசுமைக் குடில், மாடித்தோட்டம் அமைப்பது எனச் சுயதொழில் செய்ய மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. மாலை 5.15-ல் இருந்து 6 மணி வரை திறந்தவெளி வகுப்பு நடத்துகிறோம். இதில் விவசாயம் குறித்த அரசின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகள், வேளாண் பட்ஜெட், நாட்டின் பொருளாதாரம், அரசுகளின் திட்டம், உலக நடப்பு எனப் பாடப் புத்தகத்தில் இல்லாத பலவற்றை அதில் விவாதிக்கிறோம்.
எங்கள் கல்லூரியில் வேளாண் படிப்பு படித்துவிட்டு வெளியே செல்லும் ஒரு மாணவர் ‘நான் விவசாயம் படிச்சிருக்கேன். நான் எங்க வேணும்னாலும் பொழைச்சுக்குவேன், எனக்கானதை நான் உற்பத்தி செஞ்சுக்குவேன்’ என்ற தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு” என்கிறார்கள் இக்கல்லூரியின் நிர்வாகிகள்.
விவசாயக் கல்வியுடன் விருந்தும் கொடுப்போம்!
இக்கல்லூரியின் இயக்குநர் முனைவர் ப.வெங்கடாசலம், “தமிழ்நாட்டில் ஏராளமான வேளாண் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. வேளாண்மை படித்துவிட்டு வெளியே வரும் பட்டதாரிகளுக்கு நேரடி விவசாய அனுபவம் இருக்குமா என்பது ஒரு பெரிய கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. வேளாண் பட்டதாரிகளை விவசாயிகளாக உருவாக்க வேண்டும். வேளாண்மை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு வேளாண்மை சார்ந்த பின்புலம் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், விவசாயத்தை ஒரு பாடமாக மட்டுமே பார்ப்பார்கள். இதனால் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் ஏற்படும் பின்னடவுகள் அதிகம்.
எங்கள் கல்லூரியில் வேளாண்மைப் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு வெறும் புத்தகப் படிப்பு மட்டும் போதாது. தினமும் பண்ணையில் நேரத்தை செலவிடுவதை ஒரு வாழ்க்கை முறையாக உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் சங்கங்களை உருவாக்கினோம். மாணவர்களும் பேராசிரியர்களும் தினமும் களத்தில் இறங்கி இதற்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். இப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருள்களை, சந்தை விலையை விடக் குறைவான விலைக்கு விற்பனை செய்வதற்கென மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அடங்கிய ‘விலை நிர்ணயக் குழு’ ஒன்றினை அமைத்துள்ளோம். இந்த வருமானத்தில் ஒரு பகுதியை எடுத்து மாணவர்களுக்கு அவ்வபோது ஒரு சின்ன விருந்து கொடுப்போம். மீதமுள்ளவற்றை அவர்களுடைய சங்கத்தின் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்’’ எனத் தெரிவித்தார்.
Original Article link : https://www.vikatan.com/news/agriculture/agricultural-students-doing-farm-activities-in-college-campus
Courtesy Pasumai Vikatan